மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம்: கடலோர காவல்படை தளபதி சொன்னது என்ன?


மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம்: கடலோர காவல்படை தளபதி சொன்னது என்ன?
x
தினத்தந்தி 22 Nov 2017 10:15 PM GMT (Updated: 22 Nov 2017 7:10 PM GMT)

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் கடலோர காவல்படை தளபதி சொன்னது என்ன? என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படை தளபதி ராமராவ் கூறியதாக வெளியான சில தகவல்களை மறுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாக் ஜலசந்தியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

“விசாரணையின் கீழ் உள்ள கடலோர காவல்படை கப்பல் தனது கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல. ஆகவே அந்த சம்பவம் தொடர்பாக எதையும் உறுதிபடுத்தவோ அல்லது மறுக்கவோ தன்னால் முடியாது”, என்று கடலோர காவல்படை நிலைய தளபதி ராமராவ் தெளிவாக தெரிவித்துள்ளார்.

மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவோ அல்லது குண்டுகள் தொடர்பாகவோ அந்த அதிகாரி எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

பாக் ஜல சந்தியில் மீன்பிடி படகு மீது எந்தவித தாக்குதலோ அல்லது துப்பாக்கி சூடோ நடத்தப்படவில்லை என்பது, கடலோர காவல் படை கடந்த 14-ந்தேதி வெளியிட்ட செய்தி குறிப்பில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என்று ராணுவ மந்திரி தெரிவித்த பிறகும், தமிழகத்திலுள்ள ஒரு பிரிவினர் அவர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் உண்மையை திரித்து, திசை திருப்பி, தவறான செய்திகளை வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story