அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி பேட்டி


அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2017 10:30 PM GMT (Updated: 23 Nov 2017 8:16 PM GMT)

அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள சூழ்நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்(தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.) ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டியளித்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. பெயர், சின்னம், கொடி எல்லாவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி அணிக்கு வழங்கி உள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்ற போது, அவரது அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.பி.க்கள் மட்டும் இருந்தனர். எங்கள் அணியில் 122 எம்.எல்.ஏ.க்களும், 37 எம்.பி.க்களும் இருந்தனர். தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் பக்கம் இருந்தனர். 7 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து இருந்தோம். ஆனால் அப்போது தேர்தல் கமிஷன் எங்களுக்கு கட்சி பெயர், சின்னத்தை ஒதுக்கவில்லை.

தற்போது மத்திய பா.ஜ.க. அரசின் தலையீட்டால் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு செல்லாது. மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட 83 பக்க அறிக்கையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்று கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் தனி பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் பலம் தேவை. எனவே தேர்தல் ஆணையமே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று கூறிவிட்டது.

கேள்வி:- உங்கள் அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- எங்கள் அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை(இன்று) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார். நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்.

கேள்வி:- நீதிமன்றத்தில் வழக்கு அப்பீல் முடியும் வரை உங்கள் அணியின் பெயர், சின்னம், கொடி என்னவாக இருக்கும்?

பதில்:- அ.தி.மு.க. (அம்மா) தான் எங்கள் அணியின் பெயர். சின்னம்மா(சசிகலா) தான் பொதுச்செயலாளர். கட்சி சின்னத்தை மட்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் கொடியை நாங்கள் பயன்படுத்துவோம். ஏனென்றால் நாங்கள் இரு அணிகளாக பிரிந்திருந்த போதும் அ.தி.மு.க. கொடியை தான் பயன்படுத்தினோம்.

கேள்வி:- ‘இரட்டை இலை’ சின்னம் பறிபோகி உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் அணி போட்டியிடுமா? டி.டி.வி. தினகரன் வேட்பாளராக மீண்டும் களம் இறங்குவாரா?

பதில்:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தான். எம்.ஜி.ஆருடைய ‘தொப்பி’ சின்னத்தில் மீண்டும் போட்டியிடுவோம்.

கேள்வி:- தேர்தல் கமிஷன் தீர்ப்பால் உங்கள் அணியை சேர்ந்த தகுதி நீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏ.க்கள், 4 எம்.பி.க்கள் அணி மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:- கோவை மாவட்டம் திருப்பூரில் நாளை(இன்று) எங்கள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எங்கள் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

எங்கள் அணியை சேர்ந்தவர்கள் யாரும் அணி மாற மாட்டார்கள்.

கேள்வி:- பெங்களூரு சிறையில் இருக்கும் உங்கள் அணியின் பொதுசெயலாளர் சசிகலாவின் ஆலோசனையை பெறுவீர்களா?

பதில்:- நிச்சயமாக 15 நாட்களில் அவரை சந்தித்து, ஆலோசனை பெறுவோம்.

கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் உங்கள் அணியில் தொய்வு, பின்னடைவு ஏற்பட்டுள்ளதா?

பதில்:- கூடுதல் பலம் தான் ஏற்பட்டுள்ளதே தவிர, தொய்வு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story