ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை


ராயபுரத்தில்  உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 14 Dec 2017 10:34 AM GMT (Updated: 14 Dec 2017 10:34 AM GMT)

டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சோதனை சாவடியில் மத்திய ரிசர்வ் போலீசார் தனியார் பள்ளிக்கூட பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது பஸ்சில் பெட்டி பெட்டியாக குக்கர்கள், டிபன்பாக்ஸ் ஆகியவை ஏராளமாக இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே போலீசார்  பஸ்  டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அது கிறிஸ்தவ பள்ளிக்கூட பஸ் என்பதால் பள்ளி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

அப்போது கிறிஸ்துமஸ் விழாவுக்காக  பள்ளி ஆசிரியைகளுக்கு  பரிசு கொடுப்பதற்காக  குக்கர் வாங்கி  வருவதாகவும் அதற்கான பில் உள்ளது என்றும் தெரிவித்தனர். எந்த  கடையில்  யார் மூலம் வாங்கி வரப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். அதனை போலீசார் சரிபார்த்து உறுதிப்படுத்தினர்.

அரசியல் கட்சியினர் யாரும் புகார் கூறாததால் அந்த பஸ் விடுவிக்கப்பட்டது. காசிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு  முன்பு இதேபோல் ஒரு வேனில் கொண்டு செல்லப்பட்ட 500 குக்கர்கள் பிடிபட்டது. அதுவும்  கிறிஸ்துமஸ் விழாவுக்கு பரிசு கொடுக்க கொண்டு செல்லப்படுவதை உறுதிபடுத்தியதால் போலீசார் அந்த வாகனத்தையும் விடுவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில்  போட்டியிடுவதால் குக்கர்  ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு பில் இருந்தால் மட்டுமே அதை விடுவிக்கின்றனர்.

இந்த நிலையில் ராயபுரத்தில்  உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து  வருமானவரித் துறையினர் இங்கு சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story