மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை
x
தினத்தந்தி 15 Dec 2017 10:00 PM GMT (Updated: 15 Dec 2017 9:47 PM GMT)

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை விசாரணை ஆணையத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல்

சென்னை,

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கையை தமிழக அரசு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுய நினைவு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மருத்துவர் பாலாஜி மட்டும், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுயநினைவு இல்லை என்றும் ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை பார்க்கவில்லை’ என்று மற்ற மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதேபோன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுயநினைவு இல்லை என்று ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. அதன்படி மருத்துவ அறிக்கையை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையிலும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு சுயநினைவு இல்லை என்ற தகவலை அப்பல்லோ நிர்வாகம் கடைசி வரை வெளியிடவில்லை.

யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலை குறித்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி மற்றும் அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதேபோன்று ஜெயலலிதா திடீரென்று சுய நினைவு இழக்கும் நிலைக்கு சென்றது எப்படி?, அந்த அளவுக்கு அவரது உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டதா? என்பது குறித்து ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரிடம் விசாரிக்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.


Next Story