சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்


சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:30 PM GMT (Updated: 16 Dec 2017 12:29 AM GMT)

சென்னை அண்ணா சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள், பஸ் காண்ணாடியை அடித்து உடைத்தார்கள்.

சென்னை,

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தின் முன்பு நேற்று 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை முடிந்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பல்லவன் இல்லத்துக்கு வந்தனர். அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் மேடையில் விளக்கி பேசினார். அப்போது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 27 மற்றும் 28–ந் தேதிகளில் நடைபெற இருப்பதால் வேலைநிறுத்த போராட்டத்தை முடித்துக் கொள்வோம் என்று கூறினார்.

ஆனால், சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர் மேடையில் ஏறி ‘மைக்’ வைத்திருந்த மேஜையை கீழே தள்ளிவிட்டனர். நாற்காலிகளையும் அடித்து நொறுக்க தொடங்கினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த சமயத்தில், போராட்டக்காரர்கள் சிலர் அண்ணா சாலை நோக்கி சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கொருக்குப்பேட்டை நோக்கி வந்த மாநகர பஸ் (தடம் எண் 32 பி) பல்லவன் சாலை நோக்கி திரும்பியது. அந்த பஸ்சை போராட்டக்காரர்கள் மறித்து, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு இடையே, போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் சுமார் 200 பேர் அண்ணா சாலையில் மாலை 4.45 மணிக்கு தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாலை 6.15 மணி வரை போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசாரால் முடியவில்லை.

இதனால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிராட்வே செல்லும் வாகனங்கள் அண்ணா சாலையில் இருந்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

அதன்பின்னர், போராட்டக்காரர்களுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினர். ஆனால், ஒரு சிலர் பல்லவன் இல்ல வாயில் கதவை பூட்டு போட்டு பூட்டி அதன் முன்பு இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டது. பின்னர், அவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். அதன்பிறகே, பல்லவன் சாலையில் அமைதி திரும்பியது.


Next Story