ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு


ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2017 11:45 PM GMT (Updated: 16 Dec 2017 9:41 PM GMT)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அமைச்சர்கள் அனைவரும் களம் இறங்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தேர்தல் பிரசார பணியை கவனிப்பதற்காக அமைச்சர்களுக்கு தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி வேல்முருகன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தி.மு.க.வினர் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் வேல்முருகன் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அந்த வழியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் கண்ணாடி கற்கள் வீசி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் துணை ராணுவ படை வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேல்முருகன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடியை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story