‘ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை’ இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன்


‘ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை’  இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன்
x
தினத்தந்தி 13 Jan 2018 12:00 AM GMT (Updated: 12 Jan 2018 8:36 PM GMT)

அப்பல்லோ மருத்துவமனையில் நான் ஜெயலலிதாவை சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சென்னை,

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி சிகிச்சை அளிக்க சென்றதாக கூறப்பட்ட சென்னை மருத்துவ கல்லூரி இருதய சிகிச்சை நிபுணர்கள் தினேஷ், சுவாமிநாதன் ஆகியோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதில் டாக்டர் தினேஷ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார்.

மற்றொரு டாக்டரான சுவாமிநாதன் நேற்று காலை 10 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சுமார் 30 நிமிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறும்போது, “விசாரணை ஆணையத்தில் மருத்துவ குறிப்பு தொடர்பான விளக்கம் கேட்டார்கள். அதை சொன்னேன். டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவை நான் நேரடியாக சந்திக்கவும் இல்லை, சிகிச்சை அளிக்கவும் இல்லை, ‘எக்மோ’ கருவி பொருத்தவும் இல்லை. ஆனால் அன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனையில் என்னுடன் சேர்ந்து 4 பேர் இருந்தோம். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்துக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் 21-ந் தேதி சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதுதொடர்பாக பதில் அளிக்க ஏதுவாக சசிகலா தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவர்கள் விவரம் வேண்டும் என்று மனு வழங்கினார். இன்னும் சிலர் புதிய சாட்சிகளாக வர இருக்கிறார்கள்.

விசாரணை ஆணையத்தில் சாட்சி அளிப்பவர்கள் முழுவதுமாக முடிந்த பின்னர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவர்களின் விவரங்களை கொடுக்க வேண்டும். விவரங்கள் பெறப்பட்ட 16-வது நாளில் எந்த தாமதமும் இன்றி குறுக்கு விசாரணை மற்றும் சசிகலாவின் சாட்சியத்தை அளிக்கிறோம் என்று மனு கொடுத்து வாதிட்டோம்.

நீண்ட வாதத்துக்கு பிறகு, எங்கள் மனுவை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஒத்திவைத்தார். ஆணையத்தின் மீதும், அதன் நிர்வாகத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை 75 நாட்கள் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பான விவரங்களை 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களை 2 பெட்டிகளில் வைத்து கொண்டுவந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் வக்கீல் மகிபூனம் பாட்ஷாவும் உடன் வந்தார். அந்த ஆவணங்கள் விசாரணை ஆணைய தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட 30 தொகுப்புகள் அதில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆவணங்களை சரிபார்க்கும் வரை அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை ஆணையத்தில் இருந்தனர். வக்கீல் மகிபூனம் பாட்ஷா விசாரணை ஆணையத்தில் என்னென்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்ற விவரத்தை ஆணைய தலைவரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள இந்த விவரங்கள் பதிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

ஆவணங்களை தாக்கல் செய்ய தாமதம் ஆனதற்கான காரணம் குறித்து அப்பல்லோ ஊழியர்களிடம் கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அசல் விவரங்களை தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. எங்களுக்கு ஒரு நகல் வேண்டும் என்பதற்காக அதை ‘ஸ்கேன்’ எடுக்க தாமதம் ஆனதாக தெரிவித்தனர்.

அப்பல்லோ தாக்கல் செய்த ஆவணங்கள் மருத்துவம் தொடர்பான விவரங்களாக இருப்பதால் அதை ஆய்வு செய்வதற்கு மருத்துவக்குழு ஒன்று இருந்தால் தான் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். எனவே மருத்துவ ஆவணங்களை பரிசீலிக்க விசாரணை ஆணையத்தில் மருத்துவக்குழு விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்படி மருத்துவக்குழு நியமிக்கப்பட்டால், அக்குழு ஆவணங்களை ஆய்வு செய்து ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைகள் குறித்த விவரங்களை ஆணைய தலைவருக்கு தெரிவிக்கும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நேற்றைய விசாரணை முடிந்ததும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் விசாரணையை தொடங்க இருக்கிறார்.

22-ந் தேதி டாக்டர் சிவகுமார், 23-ந் தேதி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 24-ந் தேதி பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் முத்துமாணிக்கம், 25-ந் தேதி கைரேகை நிபுணர் டாக்டர் பாலாஜி ஆகியோர் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

Next Story