சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனை: ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணமா?


சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனை: ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணமா?
x
தினத்தந்தி 12 Jan 2018 10:00 PM GMT (Updated: 12 Jan 2018 8:50 PM GMT)

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை,

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 187 இடங்களில் கடந்த நவம்பர் மாதம் 5 நாட்கள் வருமான வரித்துறை மெகா சோதனை நடந்தது. இதேபோல போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் சசிகலா மற்றும் பூங்குன்றன் தங்கிய அறைகளில் 2 முறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் 2 பென் டிரைவ் கள், ஒரு லேப்-டாப் மற்றும் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடந்தது. அவர்கள் அளித்த தகவல் மற்றும் ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடந்து வந்தது. அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து ஆவணங் களை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம், பல முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்களில் வெளியான தகவல் வருமாறு:-

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் வீடுகள், நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர் நடத்திய 30 போலி நிறுவனங்களையும் சேர்த்து, சோதனையில் 80 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பட்டுள்ளன.

போலி நிறுவனங்களின் பெயரில் 1,800 ஏக்கர் நிலம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிப்பின் போது, ஒரு தனியார் நிறுவனம் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து ரூ.150 கோடி பெற்று, அந்த பணத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 1,200 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்துள்ளது.

சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களுடைய பெயரில் கணக்கில் காட்டாத பினாமி சொத்துகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 200 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போயஸ் தோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த பென்டிரைவ், ஹார்டு டிஸ்க்குகளில் கிடைத்த ஆவணங்கள்தான் இந்த வழக்கில் திருப்பத்தை தந்துள்ளது.

இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Next Story