சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி


சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2018 11:45 PM GMT (Updated: 12 Jan 2018 8:55 PM GMT)

சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோசாட்-2 உள்பட பல்வேறு நாடுகளின் 31 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இஸ்ரோ இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் தகவல் தொடர்புக்கான ஜி.எஸ்.எல்.வி.-2 ராக்கெட் செலுத்தப்படும். இந்த ராக்கெட்டின் வெற்றிகரமான பயணம் புதிய தலைவராக வர உள்ள கே.சிவனுக்கு மிகச்சிறந்த தொடக்கமாக இருக்கும். தொடர்ந்து 3 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கு திட எரிபொருள் கொண்ட மோட்டார் தயாரிக்கும் பணி தொடங்கப்படும். பல செயற்கைகோள்களை ஒரே சுற்றுப்பாதையில் செலுத்துவதில் இருந்து பல்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தும் ஆற்றலை இஸ்ரோ பெற்றுள்ளது. ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் துடிப்பாக செயல்பட்டு தவறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்வது அவசியம். நடப்பாண்டில் 3 ஜி.எஸ்.எல்.வி., 9 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இஸ்ரோ அடுத்த அனுப்ப உள்ள ஜி.சாட்-11 செயற்கைகோள் மூலம் 32 அலைக்கற்றைகள் வாயிலாக இந்தியாவை பார்க்க முடியும். இதன் மூலம் 14 ஜி.பி.பி.எஸ். அலகில் புகைப்படங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்ள முடியும். இந்திய ஆராய்ச்சி கலன்களை மெதுவாக சந்திரனில் தரை இறங்க செய்யும் சந்திரயான்-2 விண்கலம் பெங்களூருவில் இறுதிக்கட்ட ஆய்வுப்பணியில் உள்ளது.

இதை மார்ச் மாதம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர, பல்வேறு ராக்கெட்டுகளையும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட 7-வது செயற்கைகோள் ஆகும். தொலையுணர்வு செயற்கைகோள் மூலம் நுணுக்கமான புகைப்படங்களை எடுக்க முடியும். நகர்ப்புற மற்றும் ஊரக நில விவரங்களின் பயன்பாட்டுக்கு இந்த செயற்கைகோள் பெரிதும் உதவும்.

பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட மைக்ரோ செயற்கைகோள் 100 கிலோ எடையை கொண்டது. அதனுடன் அனுப்பப்பட்ட நானே செயற்கைகோள் நிலப்பரப்பை வரைபடம் எடுத்தல், மேகமூட்டங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த செயற்கைகோள் 11 கிலோ எடை கொண்டது. வருங்காலத்தில் இதுபோன்ற செயற்கைகோள்கள் தயாரிக்க தொழில்நுட்ப வழிகாட்டியாக இது இருக்கும். குலசேகரப்பட்டிணத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான தேவை தற்போது ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட கே.சிவன் கூறுகையில், தொழில்நுட்பம் மாறும்போது அதற்கு ஏற்ப நாமும் மாறவேண்டும். விண்வெளி ஆராய்ச்சி, பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும். ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவர்களை காப்பாற்ற செயலிகளையும் வழங்கி உள்ளோம். இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம் என்றார்.

Next Story