போகி கொண்டாட்டத்தால் கடும் புகை மூட்டம்: ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு


போகி கொண்டாட்டத்தால் கடும் புகை மூட்டம்: ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2018 10:00 AM GMT (Updated: 13 Jan 2018 10:00 AM GMT)

போகி கொண்டாட்டத்தால் சென்னையில் இன்று காலை கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Bhogi | #rail #Chennaiairport

சென்னை,

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம்  முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய  பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும்  புகையானது காற்றை மாசுபடுத்தி வருகிறது. சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டமாக காட்சி அளிக்கிறது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு  புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. ஓடுபாதையும் தெரியவில்லை. இதனால் இன்று அதிகாலை முதல் சென்னையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை வந்த 18 விமானங்கள் ஐதராபாத், பெங்களுரூ நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கிட்டதட்ட 40 விமானங்கள் தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகே இந்த நிலமை சீரானதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்சேவையும் பாதிக்கப்பட்டதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:- நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான ரயில் சேவை சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் தாமதம் ஆனது. புறநகர் ரயில் சேவைகளும் அரை மணி நேரம் வரை தாமதம் ஆனதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணிக்கு பிறகு ரயில்வே சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேபோல், சாலை வழிப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றதை காண முடிந்தது. 8 மணிக்கு சூரிய வெளிச்சம்  வந்த பிறகு, இந்த நிலமை சீரானது.  #Bhogi | #rail  | #Chennaiairport 

Next Story