காவிரியில் உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரியில் உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2018 9:00 PM GMT (Updated: 15 Jan 2018 7:46 PM GMT)

காவிரியில் உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ##Cauveryissue #narendramodi

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவ நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

கருகும் பயிர்களைக் காக்க காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோளை ஏற்க கர்நாடக முதல்-மந்திரி மறுத்துவிட்டார்.

மத்திய அரசு தலையிட்டு...

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 54.30 அடியாக, அதாவது அணையின் நீர் இருப்பு 20.25 டி.எம்.சி.யாக குறைந்துவிட்டது. இதனால், அணையில் இருந்து பாசனத் தேவைகளுக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சம்பா பயிருக்கு பிப்ரவரி வரை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் சம்பா பயிர் கருகுவதை தடுக்க முடியாது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு ஆணையையும் கர்நாடக அரசு மதிக்காத நிலையில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தான் தலையிட்டு தமிழகத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும். ஆனால், மத்திய ஆட்சியாளர்களும் கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வேடிக்கைப் பார்ப்பது மிகப்பெரிய கடமை தவறிய செயலாகும்.

தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே, குறுகிய அரசியல் லாபங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற காவிரியில் உடனே தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story