தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி


தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2018 10:30 PM GMT (Updated: 20 Jan 2018 9:03 PM GMT)

அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயர் கிடைக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஆலந்தூர், 

கோவையில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறதே?

பதில்:- 60 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி.போன்றவற்றினால் பணப்புழக்கமே இல்லாமல் தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் கட்டண உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

கேள்வி:- ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துகளை தெரிவிப்பதால் உங்களையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளரே?

பதில்:- கோமாளிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் மாறுபட்ட கருத்துகள் வருகிறது. ஏதாவது சொல்லிவிட்டு பிறகு பின்வாங்குகின்றனரே?

பதில்:- அதை பின்வாங்குபவர்களிடம் தான் கேட்கவேண்டும். எங்கள் குடும்பத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் பொதுச்செயலாளரும், அவரால் நியமிக்கப்பட்ட நானும் தான் அரசியலில் இருக்கிறோம். மற்றவர்கள் சொல்வது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அவர்கள் சொல்வது அ.தி.மு.க.வின் கருத்தாக நினைக்க கூடாது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கூறுவது அவர்களின் சொந்த கருத்து. அது கட்சியை பாதிக்காது. திவாகரனுக்கு கட்சியில் பொறுப்பு எதுவுமில்லை. அவர் எனது மாமா அவ்வளவு தான். யாரோ சொல்லும் கருத்துக்கும் எனக்கு சம்பந்தமில்லை.

தனிக்கட்சிக்கு வாய்ப்பு

கேள்வி:- தனிக்கட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதே?

பதில்:- தனிக்கட்சி தொடங்கப்படும் என கேட்காதீர்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். கட்சியை அடுத்த கட்டமாக கொண்டு செல்வது எப்படி? உள்ளாட்சி தேர்தல் வரும்போது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேவைப்படுகிறது. 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

ஐகோர்ட்டில் அ.தி.மு.க அம்மா அணி பெயரையே வைத்து கொள்ள கேட்டு உள்ளோம். அதற்கு பதில் வந்த பின்னர் தான் அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும். தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அந்த பெயர் வைத்துக்கொள்ள அனுமதிக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கித்தான் ஆகவேண்டும். பெயர் இல்லாமல் செயல்படமுடியாது. அ.தி.மு.க. அம்மா அணி என செயல்பட ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார். 

Next Story