சென்னையில் நள்ளிரவு ஐ.டி.ஐ. மாணவர் ஓட, ஓட விரட்டி படுகொலை


சென்னையில் நள்ளிரவு ஐ.டி.ஐ. மாணவர் ஓட, ஓட விரட்டி படுகொலை
x
தினத்தந்தி 20 Jan 2018 9:20 PM GMT (Updated: 20 Jan 2018 9:20 PM GMT)

சென்னையில் காதல் பிரச்சினையால் ஐ.டி.ஐ. மாணவர் நள்ளிரவு ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். #Student #Chennai

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர்கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசில் சூளைமேட்டை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் புகார் அளித்தார்.

அதன்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குளக்கரை சாலை 2-வது தெருவில் இருந்து சம்பவம் நடைபெற்ற பகுதி வரை ரத்தம் சிதறி இருந்தது. எனவே அந்த வாலிபரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் அந்த வாலிபரின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஐ.டி.ஐ. மாணவர்

கொலை செய்யப்பட்ட நபரின் சட்டையில் இருந்த அடையாள அட்டை மூலம் கொலை செய்யப்பட்டது சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 19) என்பதும், கிண்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

தனது நண்பர் ஒருவரின் சகோதரி குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு ரஞ்சித் சென்று இருக்கிறார். இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

இந்தநிலையில் ரஞ்சித் கொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு அவர்களுடைய பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

செல்போனில் கொலை மிரட்டல்

ரஞ்சித் கொலைக்கான காரணம் என்ன? அவரை கொலை செய்தது யார்? என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர். கொலை சம்பவம் நடந்த பகுதியையொட்டி உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்தனர். ரஞ்சித் பயன்படுத்திய செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். ரஞ்சித்தின் செல்போனில் ஆடியோ உரையாடல் பதிவு செய்யும் வசதி இருந்துள்ளது.

எனவே சம்பவத்தன்று அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ரஞ்சித் கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு அவருக்கு வந்த அழைப்பின் உரையாடலை போலீசார் கேட்டனர். அதில் பேசிய நபர், ‘அந்த பெண்ணை விட்டுவிடு, ‘நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ விடவில்லை என்றால் உன் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்தார்.

2 தனிப்படை

இதன் மூலம் காதல் பிரச்சினையில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் தான் அவரை தீர்த்துக்கட்டியிருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன்பேரில் செல்போனில் பேசிய நபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். 

Next Story