மாநில செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க. துடிப்பது ஏன்? திருநாவுக்கரசர் கேள்வி + "||" + Why BJP try to save power of AIADMK? Thirunavukarasar questioning

அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க. துடிப்பது ஏன்? திருநாவுக்கரசர் கேள்வி

அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க. துடிப்பது ஏன்? திருநாவுக்கரசர் கேள்வி
அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க. ஏன் துடிக்கிறது என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உறுதிமொழி ஏற்று கேக் வெட்டப்பட்டது. வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் சார்பில் 200 ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. மேற்குசென்னை மாவட்ட தலைவர் கே.வீரபாண்டியன் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் கோத்தபுரத்தை சேர்ந்த மாரடைப்பால் உயிர் இழந்த விவசாயி சக்ரவர்த்தியின் மகன் வெங்கடேஷ்வரனுக்கு கறவை மாடும் கன்றுக்குட்டியும் கோதானமாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவப்பிரிவு தலைவர் டாக்டர் எம்.பி.கலீல் ரகுமான் சார்பில் கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம், சர்க்கரைநோய் மருத்துவ முகாம், இதயநோய் மருத்துவ முகாம், காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம், ரத்ததான முகாம் உள்ளிட்ட முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழா முடிவில், திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக சட்டமன்றத்தில் ஆர்.கே.நகர் தேர்தலின் போது பணம் வினியோகம் செய்தது தொடர்பாகவும், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து பணம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோரை பேச அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. மு.க.ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கவர்னரிடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க. ஏன் துடிக்கிறது? அதில் பா.ஜ.க.வுக்கு என்ன அக்கறை. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றா? அ.தி.மு.க.வை இரண்டாக பிரிப்பது, பின்னர் அதை ஒன்று இணைக்க முயற்சிப்பது இவற்றுக்கெல்லாம் காரணம் ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. வசம் இருக்கும் 50 ஆயிரம் ஓட்டுக்காகத்தான். இதில் எடப்பாடி பழனிசாமியிடம் சுமார் 40 ஆயிரம் வாக்குகளும், ஓ.பன்னீர்செல்வத்திடம் 10 ஆயிரம் வாக்குகளும் உள்ளன. இதற்காக அவர்களை பிரித்து வைத்து அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க.

நதிகள் இணைப்பு திட்டத்துக்காக ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழக பள்ளிக்கூடங்களில் வை–பை வசதிகள் வைக்கப்படுவதை வரவேற்கிறேன். ஆனால் முதலில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தமிழக சட்டமன்றத்தில், அனைத்து அறிவிப்புகளையும் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் அறிவித்தது போன்ற தவறை எடப்பாடி பழனிசாமி செய்யக்கூடாது. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கிவைத்தார். எடப்பாடி பழனிசாமி அதுபோல் அல்லாமல் திட்டம் தொடங்கப்படும் இடங்களுக்கு நேரில் சென்றோ அல்லது அமைச்சர்கள் மூலமாகவோ திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.