மாநில செய்திகள்

வைரமுத்துவை மிரட்டலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் வைகோ அறிக்கை + "||" + Do not dream of Vaiko statement

வைரமுத்துவை மிரட்டலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் வைகோ அறிக்கை

வைரமுத்துவை மிரட்டலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் வைகோ அறிக்கை
கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் அவரை மிரட்டலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவிஞர் வைரமுத்து தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும்.

நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும். தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும் வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணிதான் வைரமுத்து ஆவார்.

அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கியப்பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாள் தந்த பாடல்களை மிக உன்னதமாகச் சித்தரித்துள்ளார்.

மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள் என்று தலைப்பிட்டு எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தினமணி நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது.

அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும். ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வைரமுத்து எடுத்துக்காட்டியிருப்பது ஒரு தவறான மேற்கோள். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தான் தெரிவித்த தவறான மேற்கோளுக்கு அவர் வருத்தம் தெரிவித்து விட்டார். அத்துடன் அந்த விஷயத்தை விட்டு விட வேண்டும். தொடர்ந்து ஆண்டாளின் புகழுக்கு பெருமை சேர்க்கும் பணியை நாம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.