பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலி


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2017 9:33 AM GMT (Updated: 23 Feb 2017 9:32 AM GMT)

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கான கட்டிடத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

லாகூர்,

லாகூர் நகரில் பாதுகாப்பு படையினருக்கான வீட்டு வசதி குடியிருப்புகள் உள்ளன.  இந்நிலையில், இன்று மதியம் இசட் பிளாக்கில் கட்டிடம் ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது.  இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.  20 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் பல்வேறு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.  இசட் பிளாக்கில் இளஞ்ஜோடிகள் வந்து செல்லும் உணவு விடுதிகளும் அமைந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்பு எதனால் நடந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.  வெடிகுண்டு நீக்க நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்து வந்துள்ளனர்.

வெடிகுண்டு முன்பே பொருத்தப்பட்டு அது வெடித்திருக்க கூடும் என போலீசார் செய்தியாளர்களிடம் கூறுகின்றனர்.

சமீபத்தில் தீவிரவாத தாக்குதல்களில் பொது மக்களில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16ல் சிந்த் மாகாணத்தில் சுபி கோவில் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 88 பேர் பலியாகினர்.  இந்த தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  இதில், அந்நாடு முழுவதிலும் 130 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டது.

அதற்கு முன் பிப்ரவரி 13ல், பஞ்சாப் சட்டமன்றம் அருகே நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

Next Story