சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற 7 புதிய கோள்கள் அமெரிக்கா கண்டுபிடித்தது


சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற 7 புதிய கோள்கள் அமெரிக்கா கண்டுபிடித்தது
x
தினத்தந்தி 23 Feb 2017 10:30 PM GMT (Updated: 23 Feb 2017 4:38 PM GMT)

சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற 7 புதிய கோள்கள் அமெரிக்கா கண்டுபிடித்தது

வாஷிங்டன், 

சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் வேற்றுகிரக வாசிகள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு அப்பால்... 

 உலக நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது. செவ்வாய், வியாழன் கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கோள்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.

அந்த கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று நாசா விஞ்ஞானிகள் மும்முரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

7 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு 

இந்த நிலையில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பூமியைப் போன்ற அளவு கொண்ட 7 புதிய கோள்களை கண்டுபிடித்து இருப்பதாகவும், இந்த கோள்கள் ஒரு நட்சத்திரத்தை சுற்றி அமைந்து இருப்பதாகவும் நாசா தெரிவித்து இருக்கிறது.

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள்கள் அமைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒளி ஒரு ஆண்டு காலத்தில் பயணம் செய்யும் தூரம் ஒரு ஒளி ஆண்டு ஆகும். ஒளி வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

வேற்றுகிரக வாசிகள் 

இந்த 7 கோள்களில் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அங்கு உயிரினங்களும், வேற்றுகிரக வாசிகளும் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக 3 கோள்களில் இந்த வாய்ப்பு அதிகம் இருப்பதாக நாசா கருதுகிறது.

விண்வெளியில் ஏற்கனவே சில புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், புதிதாக சூரிய குடும்பத்துக்கு அப்பால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று தெரியவந்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானி தாமஸ் ஜூர்புசென் தெரிவித்தார்.

நாசாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Next Story