வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை வழக்கு: உடலை தரமறுப்பது சட்டவிரோதமானது மலேசியா மீது வடகொரியா பாய்ச்சல்

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை வழக்கு: உடலை தரமறுப்பது சட்டவிரோதமானது மலேசியா மீது வடகொரியா பாய்ச்சல்
x
தினத்தந்தி 23 Feb 2017 8:00 PM GMT (Updated: 23 Feb 2017 4:48 PM GMT)

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின், அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

சியோல்,

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின், அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையின் பின்னணியில் வடகொரியாவின் தொடர்பு இருப்பதாக மலேசிய போலீசார் சந்தேகிக்கின்றனர். பதவி போட்டியில் கிம் ஜாங் அன் அவரை கொன்றிருக்கலாம் என்று தென்கொரியா குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே கிம் ஜாங் நாம் உடலை பெறுவதில் வடகொரியா முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் மலேசியாவோ, கொல்லப்பட்டவரின் குடும்ப உறவினர் ஒருவர் மரபணு மாதிரியை தந்து, அதை அவரது மரபணுவுடன் ஒப்பிட்டு, அடையாளம் காணப்பட்ட பின்னர்தான் வடகொரியாவைச் சேர்ந்தவரின் உடலை ஒப்படைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடகொரியாவின் நீதிபதிகள் அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘‘வடகொரியாவை சேர்ந்த நபரின் பிரேதபரிசோதனையை சட்டவிரோதமாகவும் முறையற்ற வகையிலும் மலேசியா மேற்கொண்டிருக்கிறது. மரபணு மாதிரியை கொடுக்கவேண்டும் என்பது போன்ற கேலிக்குரிய காரணத்தை கூறி உடலை ஒப்படைப்பதில் தாமதப்படுத்தி வருகிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. சர்வதேச நெறிமுறைகளை மீறுவதாகவும் இருக்கிறது’’ என கூறப்பட்டு உள்ளது.

Next Story