அமெரிக்கா மீது சீனா மறைமுக தாக்கு


அமெரிக்கா மீது சீனா மறைமுக தாக்கு
x
தினத்தந்தி 25 March 2017 12:46 PM GMT (Updated: 25 March 2017 12:46 PM GMT)

சீனத் துணைப் பிரதமர் ஸாங் காவோலீ உலக சமாதானத்தை பேணுவது பெரிய நாடுகளின் பொறுப்பு என்றும், நிலைத்தத்தன்மைக்கும், அமைதியான வளர்ச்சிக்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார். இப்பேச்சு அமெரிக்காவை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது என்று கருதப்படுகிறது.

பாவோ (சீனா)

சீனத் துணைப் பிரதமர் ஸாங் காவோலீ உலக சமாதானத்தை பேணுவது பெரிய நாடுகளின் பொறுப்பு என்றும், நிலைத்தத்தன்மைக்கும், அமைதியான வளர்ச்சிக்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார். இப்பேச்சு அமெரிக்காவை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது என்று கருதப்படுகிறது.

அவரது பேச்சு இவ்வாரம் வட கொரியா மற்றொரு அணு சோதனையை நடத்த தயாராகி வருகிறது எனும் சூழலில் அமைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் வட கொரியா நான்கு கண்டம்-விட்டு-கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இச்சோதனை அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ ஒத்திகைகளுக்கு பதிலடியாக இருந்தது. ”பெரிய நாடுகள் உலக அமைதியை பேணவும், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும், ஒருவர் மற்றவரது நலன்களை அங்கீகரிக்கவும், அக்கறைகளை பகிரவும் பொறுப்புகளைக் கொண்டுள்ளன” என்றார் ஸாங். ஆனால் பெரிய நாடுகள் எவை எவை என்பதை அவர் கூறவில்லை.

அமெரிக்க சீனாவிடம் வட கொரியாவை கட்டுப்படுத்தி வைக்கும்படி கோரி வருகிறது. சீனாவோ, அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் ஒத்திகைகளை நிறுத்த வேண்டும் என்றும், வட கொரியாவும் தனது ஆயுத சோதனைகளை நிறுத்தி விட்டு இருதரப்பாரும் பேச்சு வார்த்தைகளை துவக்க வேண்டும் என்கிறது. 

இதனிடையே அமெரிக்கா தென் கொரியாவில் நிறுத்தியுள்ள தனது வலிமை வாய்ந்த ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் புதிய வெளியுறவுச் செயலர் டில்லர்சன் பயணம் மேற்கொண்ட போது அதிபர் ஸீ ஜின்பிங் இரு நாடுகளும் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார். இதனிடையே அமெரிக்க வர்த்தகச் செயலர் வில்பர் ராஸ் சீன பொதுத்துறை நிறுவனங்கள் ஏராளமான மானியங்களுடன் நடத்தப்படுகின்றன. சீனா தனது முக்கிய துறைகளை அந்நிய நிறுவனங்களின் முதலீட்டிற்காக திறந்து விடுவதில்லை எனக் கூறி வருகிறார். அதிபர் டிரம்ப் சீனாவைத் தாக்கியே தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தார். சீனா தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்துவதாக அவர் கூறி வந்தார். ஆனால் இதுவரை அதற்காக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

எனினும் ஸாங் சீனா தனது கதவுகளை திறந்தே வைக்கும் என்றார். நிலைமை இப்படியிருக்க டிரம்பும், ஜின்பிங்கும் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்தித்து பேச உள்ளனர்.


Next Story