வாட்ஸ் - அப் போன்ற தளங்களின் தகவல் பாதுகாப்பு முறை ஆபத்தானது - இங்கிலாந்து அமைச்சர்

வாட்ஸ் - அப் போன்ற தளங்களின் தகவல் பாதுகாப்பு முறை ஆபத்தானது - இங்கிலாந்து அமைச்சர்
x
தினத்தந்தி 26 March 2017 11:06 AM GMT (Updated: 26 March 2017 11:06 AM GMT)

இங்கிலாந்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆம்பெர் ரூட் வாட்ஸ்-அப் போன்ற தகவல் பரிமாற்ற தளங்கள் ஆபத்தானதாக மாறிவிட்டது என கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டன்

இங்கிலாந்து உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆம்பெர் ரூட் வாட்ஸ்-அப் போன்ற தகவல் பரிமாற்ற தளங்கள் ஆபத்தானதாக மாறிவிட்டது என கருத்து தெரிவித்துள்ளார். 

அவை தங்களது பயனாளிகள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க அவற்றை குறியீடுகளாக முழுமையாக மாற்றி அனுப்புகின்றன. இதனால் அத்தகவல்களை யாரும் இடைமறித்து படித்துப் பார்க்க முடியாது. இந்த இரகசியமுறை பயனாளிகளுக்கு அவர்களது தகவல் கசியாது எனும் பாதுகாப்புணர்வைத் தருகிறது. இம்முறையை எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் என்கின்றனர். இப்போது அந்த முறையினால் சிக்கல் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தமுறையினால் தீவிரவாதிகள் தங்களது தகவல் பரிமாற்றங்களை ரகசியமாக செய்து கொள்கின்றனர் என்கிறார் அவர். சமீபத்தில் இங்கிலாந்து பாராளுமன்றம் அருகில் நால்வரைக் கொன்ற காலித் மசூத் எனும் தீவிரவாதி தாக்குதலுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பிபிசி செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர், “எனது பார்வையில் தீவிரவாதிகள் இத்தகைய வசதிகளை ரகசியமாக பயன்படுத்த இடம் கொடுக்கக் கூடாது. உளவு நிறுவனங்கள் இது போன்ற தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும் வசதியை பெற்றிருக்க வேண்டும்” என்றார். 

Next Story