தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டு உள்ளது ராஜபக்சே மகன்


தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டு உள்ளது ராஜபக்சே மகன்
x
தினத்தந்தி 26 March 2017 11:58 AM GMT (Updated: 26 March 2017 11:57 AM GMT)

தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டு உள்ளது என ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே கூறிஉள்ளார்.

கொழும்பு,

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சார்பில் அனைத்து வசதிகளையும் கொண்ட 150 வீடுகள் கட்டப்பட்டது. அகதி முகாம்களில் வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் வவுனியா சென்று லைக்கா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட 150 வீடுகளை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. 

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர் இலங்கை செல்ல இருந்ததற்கான விளக்கத்தை தெரிவித்தார். மேலும், நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட லைக்கா நிறுவனம் அரசியல்வாதிகள் சுயலாபத்துக்காக ரஜினிகாந்தை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டு உள்ளது. ரஜினியாக இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் அனுமதிக்க மாட்டார்கள் என்று டுவிட்டரில் கூறிஉள்ளார். இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து பேசிஉள்ள நமல் ராஜபக்சே, இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்றும் கூறிஉள்ளார். 

Next Story