ரஜினி இலங்கை பயணம் ரத்து: சர்ச்சையை கிளப்பும் ராஜபக்சேவின் மகன்


ரஜினி இலங்கை பயணம் ரத்து: சர்ச்சையை கிளப்பும் ராஜபக்சேவின் மகன்
x
தினத்தந்தி 27 March 2017 10:28 AM GMT (Updated: 27 March 2017 10:28 AM GMT)

ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தது தொடர்பாக முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னை


இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, லைகா நிறுவனம் சார்பாக 150 புதிய வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் உரிமையாளரும், 2.0 படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழர்களுக்கு வீடு வழங்க சூப்பர்ஸ்டாருக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று ரஜினிகாந்தும் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினி இலங்கை செல்வதற்கு தமிழகத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை செல்வது முறையல்ல என வேண்டுகோள் வைத்ததன் பேரில் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்ததாக லைகா நிறுவனம் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


அவரது டுவீட்டில், 'தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அது நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நமல் ராஜபக்சே அளித்த பேட்டியில், தமிழக அரசியல்வாதிகள் யாரும் இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்தததில்லை. அதற்கு மாறாக இலங்கை அரசை கண்டித்து நன்றாக பேச மட்டும் செய்வார்கள். இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவிடாமல் செய்வார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுப்பார்கள் என நாமல் தெரிவித்துள்ளார்.


Next Story