அமெரிக்க கோர்ட்டில் ‘எச்–1 பி விசா’ வழக்கு தள்ளுபடி ‘குலுக்கல் மூலம் பயனாளிகளை தேர்வு செய்ய தடை இல்லை’


அமெரிக்க கோர்ட்டில் ‘எச்–1 பி விசா’ வழக்கு தள்ளுபடி ‘குலுக்கல் மூலம் பயனாளிகளை தேர்வு செய்ய தடை இல்லை’
x
தினத்தந்தி 29 March 2017 9:45 PM GMT (Updated: 29 March 2017 9:20 PM GMT)

அமெரிக்கா வழங்கும் ‘எச்–1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்ய இது உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

அடுத்த நிதி ஆண்டுக்குரிய ‘எச்–1பி விசா’வுக்கு வரும் 3–ந் தேதி முதல் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பொதுப்பிரிவில் 65 ஆயிரம் விசாக்களும், அமெரிக்க கல்வி நிறுவனத்தில் உயர்படிப்பு படித்து பட்டம் பெற்ற வெளிநாட்டினர்களுக்கு 20 ஆயிரம் விசாக்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பிப்பதால் லாட்டரி மூலம்தான் (குலுக்கல் முறையில்) தேர்வு செய்து, விசா வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த லாட்டரி நடைமுறைக்கு எதிராக ஒரேகான் மாவட்ட கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கலானது. இந்த வழக்கை நீதிபதி மைக்கேல் சைமன் விசாரித்தார்.

குலுக்கல் முறையின்றி ‘எச்–1பி விசா’ விண்ணப்பங்களை பரிசீலிக்கவே முடியாது என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு வாதிட்டது.

அதை நீதிபதி மைக்கேல் சைமன் ஏற்றுக்கொண்டார். முடிவில் குலுக்கல் நடத்துவதற்கு எதிரான வழக்கை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எனவே குலுக்கல் மூலமே ‘எச்–1பி விசா’ பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; அதற்கு எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story