ஆபாச ஆடை என விமர்சனம் சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த பிரபல பாடகி


ஆபாச ஆடை என விமர்சனம் சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த பிரபல பாடகி
x
தினத்தந்தி 27 May 2017 10:06 AM GMT (Updated: 27 May 2017 10:06 AM GMT)

ஆபாச ஆடை என விமர்சனம் எழுந்ததால் சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த பிரபல பாடகி அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற பாடகியான அர்யானா சயீத் ஆப்கான் பாடல்கள், பாப் பாடல்கள் மற்றும் ஹிப்-ஹாப் பாடல்களை பாடுவார். பாடல்களையும் எழுதும் அர்யானா, தொலைக்காட்சி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காபூலைச் சேர்ந்த டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குரல் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றுகிறார் அர்யானா சயீத்.

பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அர்யானா சயீத் அணிந்திருந்த இறுக்கமான உடை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

தான் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார். தனது பேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோ பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது.

தனது விருப்ப உடையை எரிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை என்றாலும், "இந்த உடைதான் பிரச்சனைக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால், இன்றே உங்களுக்காக இந்த உடைக்கு தீ வைக்கிறேன்" என்று தன்னை பேஸ்புக்கில் தொடரும் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களிடம் அர்யானா தெரிவித்து இருந்தார்.

"பழங்காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் இவ்வாறு செய்யவில்லை. ஆனால், நமது சமூகத்தில் முக்கியமான பல விசயங்கள் குறித்து விழிப்புணர்வு எழவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்" என்று தனது சமூக ஊடக நண்பர்களிடம் கூறும் அர்யானா உறுதியாக இருக்கிறார்.

அவரது நடவடிக்கைகள் சமூக ஊடகத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருந்தாலும், அர்யானாவுக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது. "ஆடையை எரிப்பது என்பது சரியல்ல என்றாலும், நியாயமற்ற முறையில் விமர்சித்தவர்களின் வாயை இதன் மூலம் அடைத்துவிட்டார் அர்யானா." என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன சமூக ஊடகங்களில்.

Next Story