லிபியாவில் பயங்கரவாத தளங்கள் மீது எகிப்து ராணுவம் தாக்குதல்; 28 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி


லிபியாவில் பயங்கரவாத தளங்கள் மீது எகிப்து ராணுவம் தாக்குதல்; 28 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி
x
தினத்தந்தி 27 May 2017 10:15 PM GMT (Updated: 27 May 2017 7:48 PM GMT)

எகிப்தின் மின்யா பகுதியில் நேற்று முன்தினம் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்களை மறித்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கெய்ரோ,

முகமூடி அணிந்து வந்த பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எகிப்து அரசு, இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரித்தது. அப்போது இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் பங்களிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த பயங்கரவாதிகள் லிபியாவின் கிழக்கு நகரான டெர்னாவில் முகாம்களை அமைத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எகிப்து ராணுவம் நேற்று அந்த முகாம்களில் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. ராணுவ விமானங்கள் இந்த தளங்கள் மீது 6 முறை வான்தாக்குதலை நிகழ்த்தியதாக தொலைக்காட்சி ஒன்று அறிவித்தது. இது தொடர்பான படங்களை எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர் தேமர் எல்–ரெபேவும், தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்–சிசி, ‘எகிப்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு அல்லது வெளிநாடுகளில் இருக்கும் பயிற்சி முகாம்களில் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்’ என்று கூறினார்.


Next Story