பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 11 பேர் பலி


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 11 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jun 2017 8:21 AM GMT (Updated: 23 Jun 2017 8:21 AM GMT)

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடி குண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர்.

கராச்சி, 

பாகிஸ்தானின் கனிம வளங்கள் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள  காலிஸ்தான் சாலையில், பிராந்திய காவல்துறை தலமையகம் உள்ளது. இதன் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் இன்று நிகழ்த்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகளின் காரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 போலீஸ் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.  வெடி குண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தில், சேதம் அடைந்த கார்கள் நிற்கும் காட்சிகள் உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனல்களின் வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. 

எந்த வகையான வெடி குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஷூஹதா சவுக் பகுதி அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் நிற்காமல் அந்த கார் சென்றது.

 இந்த சம்பவம் நடைபெற்ற  சிறிது நேரத்தில் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றது. எனினும் வெடி குண்டு தாக்குதலுக்கும் குறிப்பிட்ட காரில் சென்றவர்களுக்கும் தொடர்பு இருந்ததா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில், பலுசிஸ்தான் தேசியவாதிகளாலும் பயங்கரவாதிகளாலும் தொடர்ந்து கிளர்ச்சிகள்  நடைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story