கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு


கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 3:54 AM GMT (Updated: 25 Jun 2017 3:54 AM GMT)

கைலாச மானசரோவர் புனித யாத்திரையை ஆன்மிக பயணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


காங்டாக், 

இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்த யாத்திரை செல்பவர்கள், சீன எல்லையை கடந்துதான் கைலாய மலைக்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில், கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் 47 பேர் கடந்த 19–ந்தேதி சீன எல்லையை கடந்து செல்ல இருந்தனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு பயணத்தை தொடர விடாமல் சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர்.

மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சாலை நிலை மேம்பட்டவுடன் சீனா வழியாக இந்திய ஆன்மிகப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தற்போது கைலாச மானசரோவர் புனித யாத்திரையை ஆன்மிக பயணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார்.


Next Story