டயானா பலியான நாளில், அவருடன் பேசிய வில்லியம், ஹாரி


டயானா பலியான நாளில், அவருடன் பேசிய வில்லியம், ஹாரி
x
தினத்தந்தி 23 July 2017 11:45 PM GMT (Updated: 23 July 2017 8:59 PM GMT)

இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானா, தனது 36–வது வயதில், பாரீஸ் நகரில் 1997–ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

லண்டன்,

உலகையே உலுக்கிய நிகழ்வாக அது அமைந்து விட்டது.  அப்போது டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு வயது 15, இளைய மகன் ஹாரிக்கு வயது 12.

டயானாவின் 20–வது நினைவு நாளையொட்டி நினைவுகூரும் வகையில், ‘‘ டயானா எங்களது தாய்: அவரது வாழ்க்கையும், மரபுரிமையும்’’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் இன்று (திங்கட்கிழமை) இங்கிலாந்தில் ஒளிபரப்பாகிறது.

இந்த ஆவணப்படத்தில் இளவரசி டயானாவின் கடைசி நாளில் அவர் தங்களுடன் தொலைபேசியில் பேசிய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இளைய மகன் ஹாரி, ‘‘எனது அம்மா, பாரீஸ் நகரில் இருந்து தொலைபேசியில் பேசினார். நான் என்ன பேசினேன் என்பது உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் என் நினைவில் இருப்பதெல்லாம், நான் அந்த தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியது என்பதை என் வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் எல்லாம் நினைத்து வருந்துவேன் என்பதுதான்’’ என்று கூறி உள்ளார்.

இளவரசர் வில்லியம், ‘‘ஹாரியும் நானும் ஓரு குட்பை சொல்வதில் பெரும் அவசரத்தில் இருந்தோம். அப்புறம் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றதாக ஞாபகம். அந்த தொலைபேசி அழைப்பு என் மனதில் அழுத்தமாக தங்கி விட்டது’’ என்று கூறினார்.

லண்டனில் டயானா வாழ்ந்த கென்சிங்டன் அரண்மனையில் உள்ள பொதுபூங்காவில் டயானாவின் சிலை ஒன்றை நிறுவ இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் திட்டமிட்டு, இதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story