மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க முடியும் ஆஸ்திரேலிய அறிவியல் அமைப்பு நம்பிக்கை


மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க முடியும் ஆஸ்திரேலிய அறிவியல் அமைப்பு நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2017 11:12 PM GMT (Updated: 16 Aug 2017 11:12 PM GMT)

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெலத் அறிவியல், தொழில் ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது.

சிட்னி,

‘எம்.எச்.370’ என்னும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 3 ஆண்டுகளுக்கு முன்னர், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றபோது மாயமாகி விட்டது.

அந்த விமானத்தை தேடும் பணி, இதுவரை இல்லாத அளவுக்கு 160 மில்லியன் டாலர் செலவில் (சுமார் ரூ.1,040 கோடி) 3 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆனாலும் அதை கண்டுபிடிக்க முடியாமல், அதைத் தேடும் பணி கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகி விட்டதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், அந்த விமானத்தின் இருப்பிடத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. என்னும் காமன்வெலத் அறிவியல், தொழில் ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது.

அந்த விமானம் மாயமான நாளில் இருந்து 2 வாரங்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு அந்த அமைப்பு வந்துள்ளது.

ஆனால் இது தொடர்பான அறிக்கையை, ஆஸ்திரேலிய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது போதுமான அளவுக்கு விஞ்ஞானப்பூர்வமானது அல்ல என்று ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது. 

Next Story