லாடக்கில் இருநாட்டு ராணுவம் இடையே மோதல் சீனா இந்தியாவை சாடுகிறது


லாடக்கில் இருநாட்டு ராணுவம் இடையே மோதல் சீனா இந்தியாவை சாடுகிறது
x
தினத்தந்தி 21 Aug 2017 1:13 PM GMT (Updated: 21 Aug 2017 1:13 PM GMT)

லாடக்கில் எங்களுடைய ராணுவம் மீது இந்திய ராணுவம்தான் "வன்முறை நடவடிக்கையை" தொடங்கியது என சீனா சாடிஉள்ளது.


பெய்ஜிங்,

 காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி 15-ம் தேதி காலை 6 மணிக்கு சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டன. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காலை 9 மணிக்கு மற்றொரு பகுதியில் மீண்டும் சீன படைகள் ஊடுருவ முயன்றன. இதனால் இந்திய வீரர்கள் மனித சங்கிலி போல அணிவகுத்து அரணாக நின்று அவர்களின் முயற்சியை முறியடித்தனர். 

இதில் ஆத்திரம் அடைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உடனே இந்திய வீரர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் சீன படையினர் பின்வாங்கி தங்கள் பகுதிக்கு சென்றனர். சிக்கிம் எல்லை பகுதியில் சீன படைகள் அத்துமீறல் நடத்தி வரும் நிலையில் இந்திய சுதந்திர தினமான நேற்று காஷ்மீரில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றது சீனா. இதற்கிடையே இருநாட்டு வீரர்கள் மோதிக்கொள்ளும் வீடியோவானது வைரலாக பரவியது.

இந்நிலையில் லாடக்கில் எங்களுடைய ராணுவம் மீது இந்திய ராணுவம்தான் "வன்முறை நடவடிக்கையை" தொடங்கியது என சீனா சாடிஉள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சாங்யிங் பேசுகையில் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் எங்களுடைய பகுதியில் வழக்கமான ரோந்தில் ஈடுபட்ட போதுதான் இச்சம்பவமானது நடைபெற்று உள்ளது என கூறிஉள்ளார். “சீன ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்திய ராணுவம் சில வன்முறை நடவடிக்கையை தொடங்கியது, இதனால் சீன பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.” என்றார். இந்தியா இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பு பிராந்திய மட்ட ராணுவ கமாண்டர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர் என தெரிவித்து உள்ளது. 

சீனா வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது, கடுமையான எதிர்ப்பை இந்தியாவிடம் தெரிவித்து உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார் ஹூவா சாங்யிங். 

Next Story