பயங்கரவாதம் டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை; பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு


பயங்கரவாதம் டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை; பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:40 AM GMT (Updated: 22 Aug 2017 11:40 AM GMT)

பயங்கரவாதம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளது.


பெய்ஜிங்,


அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவை அறிவித்தார். 
 
டொனால்டு டிரம்ப் பேசுகையில், பயங்கரவாதத்தாலும், தீவிரவாதத்தாலும் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான், ஒவ்வொரு நாளிலும் மக்களை கொன்று குவித்து வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமும் தந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்லாயிரம் கோடி கணிக்கில் நிதிஉதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது. இதில் மாற்றம் வேண்டும்.

 அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது. 

தலீபான் மற்றும் இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை நாம் வெறுமனே இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என கடும் எச்சரிக்கையை விடுத்தார். கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து நிலை நட்பு நாடாக கருதும் சீனா, அந்நாட்டிற்கு ஆதரவை தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் தொடர்பான டொனால்டு டிரம்பின் பேச்சு குறித்து சீன வெளியுறவுத்துறை மந்திரி ஹூவா சாங்யிங் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் எண்ணற்ற தியாகங்களை செய்து உள்ளது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது, என கூறிஉள்ளார். 

Next Story