“பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்தால் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்”


“பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்தால் அமைதியாக  பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்”
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 22 Aug 2017 7:21 PM GMT)

பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் தலைமைத்தளபதி என்ற முறையில் முதல் முறையாக நேற்று மக்களுக்கு செய்தி விடுத்து, டெலிவிஷனில் உரையாற்றினார். 26 நிமிடங்கள் அவர் உரை ஆற்றினார். இந்த உரையின்போது அவர் பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ள 20 இயக்கங்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் அதன் பங்குக்கு குழப்பம், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு புகலிடமாக திகழ்கிறது. இந்த அச்சுறுத்தல் மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனென்றால், பாகிஸ்தானும், இந்தியாவும் இரு அணுஆயுத நாடுகள் ஆகும். அவர்களது உறவுகள் பதற்றமாக உள்ளது. அது மோதலாக மாறுகிற அச்சுறுத்தல் உள்ளது. அது நடக்கவும்கூடும்.
கடந்த காலத்தில் பாகிஸ்தான் நமது மதிப்புக்குரிய கூட்டாளியாக இருந்துள்ளது. நமது ராணுவம், பொதுவான எதிரிகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தாலும், தீவிரவாதத்தாலும் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான், ஒவ்வொரு நாளிலும் மக்களை கொன்று குவித்து வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமும் தந்து கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு பில்லியன் கணக்கில் (பல்லாயிரம் கோடி கணக்கில்) நாம் நிதி அளித்துக்கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது. இதில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம், உடனடியாக வரவேண்டும்.

அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது. பாகிஸ்தான், நாகரிகம், ஒழுங்கு மற்றும் சமாதானத்துக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டிய தருணம் இது.
பிராந்தியத்திலும், பிராந்தியத்துக்கு அப்பாலும் அச்சுறுத்தலாக திகழ்ந்து கொண்டிருக்கிற தலீபான் மற்றும் இன்ன பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை நாம் வெறுமனே இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் தனது உரையின்போது கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவதற்கு இந்தியா முக்கிய பங்களிப்பு செய்து வருவதை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மென்மேலும் உதவ வேண்டும். குறிப்பாக பொருளாதார உதவி செய்ய வேண்டும். மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்.
* தெற்காசிய கொள்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது இந்தியாவுடனான ராணுவ கூட்டாளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும்.

* ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா 16-வது ஆண்டாக நடத்தி வருகிற போரில் வெற்றி பெறும்.

* ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றுதான் என் உள்ளுணர்வு முதலில் கூறியது. ஆனால் அப்படி செய்தால் அந்த வெற்றிடத்தில் தலீபான்கள், அல்கொய்தாக்கள் நிரம்பி விடுவார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

* அமெரிக்காவின் எதிரிகள் நமது திட்டங்களை தெரிந்து கொள்ளக்கூடாது. நாம் எப்போது தாக்குதல் நடத்துவோம் என்பதை சொல்ல மாட்டேன். ஆனால் நாம் தாக்குதல் நடத்துவோம்.

* ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டால், போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை அவமதித்தது போலாகிவிடும். பயங்கரவாதிகள் தங்கள் இருப்பை விஸ்தரிப்பதற்கும் அது வழிவகுத்து விடும்.

இவ்வாறு டிரம்ப் தனது உரையில் தெரிவித்தார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

Next Story