பொருளாதார தடை: அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத அளவு வேதனையை சந்திக்கும் வடகொரியா எச்சரிக்கை


பொருளாதார தடை:   அமெரிக்கா  தனது வரலாற்றில் இல்லாத அளவு  வேதனையை  சந்திக்கும் வடகொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2017 6:22 AM GMT (Updated: 13 Sep 2017 6:22 AM GMT)

பொருளாதார தடை காரணமாக அமெரிக்கா தனது வரலாற்றில் இல்லாத அளவு கடுமையான வேதனையை சந்திக்கும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா,

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

கடந்த 3–ந் தேதி வடகொரியா, 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இது சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையாக அமைந்தது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒரே குரலில் வலியுறுத்தின. வட கொரியாவுக்கு  எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபையிடம் வலியுறுத்தின.

இதற்கான வரைவு  தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.  அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என வடகொரியா நட்பு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் தெரிவித்தன. அதை ஏற்றுக் கொண்டு தீர்மானத்தில் சில அம்சங்களை அமெரிக்கா திருத்தியது.

இதை தொடர்ந்து புதிய பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மானம் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. இந்த தடை காரணமாக அந்த நாட்டுக்கு ஆண்டுக்கு 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 550 கோடி) இழப்பு ஏற்படும்.

இது வட கொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார தடை ஓட்டெடுப்புக்கு பிறகு ஜெனீவாவில் ஐ.நா. சபையின் வட கொரியா  தூதர் ஹன் தயே சாங் அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான கருத்தை தெரிவித்தார்.

வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள புதிய பொருளாதார தடை தீர்மானம் சட்ட விரோதமானது. அதற்காக எனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.  இதற்காக அமெரிக்கா தனது அனுபவ வரலாற்றில் இல்லாத அளவு கடுமையான வேதனையை  சந்திக்கும் என்றார்.

Next Story