வங்காளதேச பிரதமர் ஹசீனாவை படுகொலை செய்ய சதிதிட்டம்; இந்திய உளவுத்துறை உதவியுடன் முறியடிப்பு


வங்காளதேச பிரதமர் ஹசீனாவை படுகொலை செய்ய சதிதிட்டம்; இந்திய உளவுத்துறை உதவியுடன் முறியடிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2017 5:52 AM GMT (Updated: 24 Sep 2017 5:51 AM GMT)

இந்திரா காந்தியை போன்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்து உள்ளது.

 டாக்கா, 

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 8 மணிக்கு தனது மெய்க்காப்பாளர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போன்று வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்து உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 
அவர்களில் 6 முதல் 7 பேர் மூலம் டாக்காவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது. 

அலுவலக பணியில் மூழ்கியிருக்கும் அவரது கவனத்தையும் விசுவாசமான பாதுகாப்பு படையினரின் கவனத்தையும் திசை திருப்பி கொலை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் கொலை சதி முறியடிக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்தமாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி நடந்தது. இச்சதியை ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்பின் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்து உள்ளது. இந்த சதிதிட்டத்தை இந்தியா மற்றும் வங்காளதேச உளவுப்பிரிவு கடைசிநேரத்தில் முறியடித்து உள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் ஹசீனாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள் இடையிலான டெலிபோன் உரையாடல் மூலம் கண்டு பிடித்து தடுத்து நிறுத்தினர்.

தற்போது இச்சதியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதற்காக சந்தேகப்படும் நபர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சதிதிட்டத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வங்காள தேச எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியாவை பாகிஸ்தான்‘ஐ.எஸ்.ஐ.’ உயர் அதிகாரி பிரிகேடியர் அஷ்பாப் சந்தித்தார். வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அங்கு மக்களாட்சியை முடிவுக்கு கொண்டுவந்து இஸ்லாமிய அரசை நிறுவ போராடும் பயங்கரவாத இயக்கங்களால் அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கூட்டாக இப்போது சதிதிட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது. பயங்கரவாதிகள் ஹசீனாவின் அலுவலகத்தை சுற்றிய பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்யவும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் அவரை சுட்டுக் கொல்லவும் திட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது. வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதன் மூலம் ஹசீனாவை சுட்டுக் கொல்லும் பாதுகாப்பு படையினர் எளிதாக பயங்கரவாத தாக்குதல் என தப்பிவிட முடியும் என்ன நோக்கில் திட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது என தெரியவந்து உள்ளது.

வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் அங்கு பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து உள்ளது. பயங்கரவாத சதிசெயல் முறியடிப்பு மிகவும் எச்சரிக்கையாக முறியடிக்கப்பட்டு உள்ளது, இதில் தொடர்புடைய கடைசி நபர் வரையில் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள், இதில் சந்தேகத்திற்குரிய அனைத்து நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என வங்காளதேச உயர் அதிகாரிகள் கூறிஉள்ளனர். 


Next Story