சுஷ்மா பதிலடி, ஐ.நா.வில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மீது பாகிஸ்தான் விமர்சனம்


சுஷ்மா பதிலடி, ஐ.நா.வில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மீது பாகிஸ்தான் விமர்சனம்
x
தினத்தந்தி 24 Sep 2017 7:51 AM GMT (Updated: 24 Sep 2017 7:51 AM GMT)

ஐ.நா.வில் பாகிஸ்தானின் பேச்சுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்த நிலையில் மீண்டும் விமர்சனம் செய்து உள்ளது.


நியூயார்க்,

நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில்  இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது, பயங்கரவாத பூமியாக இருப்பது பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார். சுஷ்மா சுவராஜின் பதிலடி உரைக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் மல்லிகா லோகி, இந்தியா தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் தாயகம் என குறிப்பிட்டு உள்ளார். 

சுஷ்மா சுவராஜின் பேச்சு "பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய தலைமையின் விரோதத்தைக் காட்டுகிறது" என விமர்சனம் செய்து உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி காஷ்மீர் குறித்து பேசியதை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் பேசிஉள்ளார். பிரதமர் மோடியை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக ஐ.நா.வில் விமர்சனம் செய்து உள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் அறிவுமேதைகள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் ரத்தம் படிந்த கைகளை கொண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் என பேசிஉள்ளார் மல்லிகா லோகி.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்சியில் இனவாத மற்றும் பாசிச சித்தாந்தம் உட்பொதிக்கப்பட்டிருக்கிறது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். மல்லிகா லோகி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பிற பிரதிநிதிகள் பிரதமர் மோடியையோ, பாரதீய ஜனதாவையோ குறிப்பிடவில்லை. மகாத்மா காந்தியின் கொலைக்கு பொறுப்பான இயக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறிப்பிட்டு பேசிஉள்ளார் மல்லிகா லோகி. உத்தரபிரதேசம் மாநில தேர்தலை குறிப்பிட்டு பேசிஉள்ள மல்லிகா லோகி, வெறியரை இந்திய அரசு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராக நியமனம் செய்து உள்ளது என சாடிஉள்ளார். 

Next Story