ஐநாவில் போலி புகைப்படத்தை காட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி


ஐநாவில் போலி புகைப்படத்தை காட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 26 Sep 2017 4:19 AM GMT (Updated: 26 Sep 2017 4:19 AM GMT)

ஐநாவில் போலி புகைப்படத்தை காட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜெனீவா,

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி  இந்திய ராணுவம் அத்துமீறுவதாகவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு ஆதாரமாக, குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் காண்பித்தார். அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த பெண் காஷ்மீரை சேர்ந்தவர் அல்ல, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை, ஹெய்தி லெவைன் என்ற பிரபல புகைப்பட கலைஞர் படம் பிடித்து வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட நாளிதழ்களில் ரவியாவின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக சித்தரித்து ஐ.நா. சபையில் அனுதாபத்தை அள்ள பாகிஸ்தான் தூதர் மலீஹா நாடகமாடினார். இது பாகிஸ்தானுக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் உண்மை முகத்தை ஐநா சபையிலே இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. ஐநா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்ற பாலோமி திரிபாதி, காஷ்மீரில் ராணுவ வீரர் திருமண நிகழ்ச்சியின் போது பயங்கரவதிகளால்  இழுத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவத்தை நினைவுகூர்ந்து இது தொடர்பான புகைப்படத்தையும் காட்டினார். மேலும், காஷ்மீரின் உண்மை நிலை இதுதான் எனவும், பாகிஸ்தான் காசாவில் உள்ள புகைப்படங்களை காட்டி காஷ்மீரில் நடைபெற்றதாக குழப்பத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து திரிபாதி கூறும் போது, ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதர் போலி புகைப்படத்தை காட்டி இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்தை பரப்பி இந்த அவையை தவறாக வழி நடத்தியுள்ளார். பாகிஸ்தான் குற்றத்தை தேடும் வகையில் தவறாக வழிநடத்தும் முயற்சியை கொள்கிறது” என்று தெரிவித்தார். 

Next Story