பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதிப்பு


பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 2:52 PM GMT (Updated: 11 Oct 2017 2:52 PM GMT)

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.


இஸ்லாமாபாத்,

 ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. 

ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. 

ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கினான். ‘பனாமாகேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் போட்டியிட்டார். 

 ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கியது அமெரிக்காவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கட்சிக்கு அரசியல் கட்சியென அங்கீகாரம் வழங்க தேர்தல் ஆணையத்தில் பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்து வருகின்றான். பாகிஸ்தான் அவனை சுதந்திரமாக விட்டிருந்தது, அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு பின்னர்தான் வீட்டுக்காவலில் வைத்தது.

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மில்லி முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் முறையிடுவோம் என  மில்லி முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story