ரோஹிங்யா அகதிகள் மீண்டும் தங்களுடைய இடங்களுக்கு திரும்பினாலே இயல்புநிலை ஏற்படும் சுஷ்மா சுவராஜ்


ரோஹிங்யா அகதிகள் மீண்டும் தங்களுடைய இடங்களுக்கு திரும்பினாலே இயல்புநிலை ஏற்படும் சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 23 Oct 2017 4:07 AM GMT (Updated: 23 Oct 2017 4:06 AM GMT)

ரோஹிங்யா அகதிகள் மீண்டும் தங்களுடைய இடங்களுக்கு திரும்பினால் மட்டுமே இயல்புநிலை ஏற்படும் என சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார்.


டாக்கா, 

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மியான்மரில் இருந்து உயிர்தப்பி வருபவர்கள் வங்காளதேசத்தில் அகதியாக உள்ளனர். இதுவரையில் 6 லட்சம் ரோஹிங்யாக்கள் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர். ரோஹிங்யா அகதிகளை மியான்மர் அரசு திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.

மியான்மர் அரசு ரோஹிங்யாக்கை தங்கள் நாட்டு பிரஜையாக ஏற்றுகொள்ளவில்லை, அவர்களுக்கு குடியுரிமையும் வழங்குவது கிடையாது, வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றே பார்க்கிறது. ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் மியான்மருக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வங்காளதேசம் எதிர்நோக்கி உள்ளது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வங்காளதேச அரசின் அழைப்பை ஏற்று அங்கு இருநாள் பயணமாக சென்று உள்ளார். வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி முகமது அலியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுஷ்மா சுவராஜ், மியான்மரில் ராகினேவில் நடைபெறும் வன்முறை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டு உள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய இடங்களுக்கு திரும்பினால் மட்டுமே இயல்புநிலை ஏற்படும் என்றார். இருப்பினும் சுஷ்மா சுவராஜ் ரோஹிங்யா அகதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

சமூக-பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமே ராகினேவில் அனைத்து தரப்பு மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகளுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்யும் என உறுதியளித்து உள்ளது என முகமது அலி கூறிஉள்ளார். 

Next Story