இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல்


இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Nov 2017 12:12 PM GMT (Updated: 19 Nov 2017 12:12 PM GMT)

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் தொடர்பான தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

 பெர்ன், 

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சுவிஸ் வங்கிகளில் பெருமளவு ரகசிய கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கப்பட்டு வந்துள்ளது. கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு, தாமாகவே இந்தியாவுடன் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்தியாவும், சுவிட்சர்லாந்து அரசும் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டன. இந்த ஒப்பந்தத்துக்கு சுவிட்சர்லாந்து அரசு முறைப்படி ஜூலையில் ஒப்புதல் அளித்தது.

 இதன்மூலம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களால் நடத்தப்படுகிற ரகசிய பண பரிமாற்ற விவரங்களை, இந்திய அரசுக்கு அந்த நாட்டு அரசு தாமாகவே வழங்கும். இது 2019–ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பணம் மீட்பு மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பாக இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் கருப்பு பணம் பற்றிய தகவல்களை பகிர வகை செய்யும் இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்ற கீழ்சபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. 

கருப்பு பணத்தை மீட்பதற்கு இந்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று சுவிட்சர்லாந்து பிரதமர் டோரிஸ் லியூதார்ட் உறுதியளித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க சுவிட்சர்லாந்து அரசு நன்கு ஒத்துழைப்பதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் தொடர்பான தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

சுவிட்சர்லாந்து மேல்-சபையின் முக்கிய குழுவான பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிகளுக்கான கமிஷன், இந்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு நடத்தியது. கடந்த 2-ந்தேதி நடந்த இந்த குழுவின் கூட்டத்தில், ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் தனிநபர் உரிமைகளுக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக வருகிற 27-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 


Next Story