மொரோக்கோ நாட்டில் அன்னதானத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் சாவு


மொரோக்கோ நாட்டில் அன்னதானத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் சாவு
x
தினத்தந்தி 20 Nov 2017 10:30 PM GMT (Updated: 20 Nov 2017 5:29 PM GMT)

மொரோக்கோ நாட்டில் அன்னதானத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிர் இழந்தனர்.

ரபாத், 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இங்கு உள்ள இசவுரியா மாகாணத்தில் சிதி பவுலாலம் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவன அமைப்பு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் உணவு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. 

அந்த வகையில் தனியார் தொண்டு நிறுவனம் நேற்று முன்தினம், அங்கு உள்ள ஒரு சந்தையில் மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். 

அப்போது மக்கள் முண்டியடித்துக்கொண்டு உணவு பொட்டலங்களை பெற முயற்சித்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் கீழே விழ மற்றவர்கள் அவர்கள் மீது ஏறி, மிதித்து சென்றனர். 

இந்த துயர சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 40–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் முதியோர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story