அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் விமானம் கடலில் விழுந்தது; 11 பேர் கதி என்ன?


அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் விமானம் கடலில் விழுந்தது; 11 பேர் கதி என்ன?
x
தினத்தந்தி 22 Nov 2017 8:30 PM GMT (Updated: 22 Nov 2017 7:55 PM GMT)

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் விமானம் கடலில் விழுந்தது.

டோக்கியோ,

கிழக்கு ஆசியாவில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வடகொரியா அச்சுறுத்தல் விடுத்து வருவதால் அமெரிக்க ராணுவம் தனது கடற்படையின் 3 முக்கிய போர்க்கப்பல்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதில் ஒன்றான யு.எஸ்.எஸ். ரொனால்டு ரீகன் என்ற போர்க்கப்பல் தற்போது பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இந்த கப்பலில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை ஒரு போர் விமானம் ரோந்து பணிக்காக புறப்பட்டுச் சென்றது. அதில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 11 பேர் இருந்தனர். அந்த விமானம் கண்காணிப்பு பணிகளை முடித்துவிட்டு தரையிறங்குவதற்காக ரொனால்டு ரீகன் கப்பலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. ஆனால் வழியில் ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தின் தென்கிழக்கே வந்தபோது அந்த விமானம் திடீரென விபத்துக்கு உள்ளாகி நொறுங்கி கடலில் விழுந்தது.

இதில் அந்த விமானத்தில் இருந்த 11 பேரின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரியவரவில்லை. மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக போர் விமானங்கள், போர்க்கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் உள்ள மீட்பு குழுவினர், விமானத்துடன் கடலில் விழுந்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story