நள்ளிரவு நேரத்தில் இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 3 பேர் பலி


நள்ளிரவு நேரத்தில் இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2017 10:45 PM GMT (Updated: 16 Dec 2017 8:03 PM GMT)

இந்தோனேசியாவில் நள்ளிரவு நேரத்தில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பதற்றம் நிலவியது.

ஜகார்த்தா,

ஜாவா தீவில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னர் (இரவு 11.47 மணி) சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நில நடுக்கம், டாசிக்மாலயா நகருக்கு தென் மேற்கில் 52 கி.மீ. தொலைவில், 92 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

நள்ளிரவு நேரம் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நில நடுக்கம் ஏற்பட்டதால், எழுந்து பதறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கம் 30 வினாடிகள் நீடித்தன.

சக்தி வாய்ந்த நில நடுக்கமாக அமைந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

நில நடுக்கத்தின் தாக்கத்தை தலைநகர் ஜகார்த்தாவிலும் மக்கள் உணர்ந்தனர்.

இந்த நில நடுக்கத்தில் சியாமிஸ்சில் 62 வயதான ஆணும், பெக்காலாங்கனில் 80 வயதான பெண்ணும் உயிரிழந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், 34வயது பெண் ஒருவரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானதாக தெரிவித்துள்ளது.


Next Story