இஸ்ரேல் படையினருடன் மோதல் 4 பாலஸ்தீனர்கள் பலி


இஸ்ரேல் படையினருடன் மோதல் 4 பாலஸ்தீனர்கள் பலி
x
தினத்தந்தி 16 Dec 2017 11:00 PM GMT (Updated: 16 Dec 2017 8:05 PM GMT)

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம், ஜெருசலேம். இதன் உரிமை குறித்த விவகாரம் கிடப்பில் உள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம், ஜெருசலேம். இதன் உரிமை குறித்த விவகாரம் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 6–ந் தேதி அறிவித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருகிறது.

நேற்று முன்தினம் டிரம்பின் முடிவுக்கு எதிராக காஸாமுனை, இஸ்ரேல் எல்லை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் வன்முறை தாண்டவம் ஆடியது. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த வன்முறையில் 4 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் காஸா முனை பகுதியிலும், ஒருவர் ஜெருசலேம் நகருக்கு வடக்கேயும் பலியாகினர்.

மற்றொரு சம்பவத்தில் இஸ்ரேல் போலீஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்த முயற்சித்தபோது ஒரு பாலஸ்தீனர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.


Next Story