வங்கதேச பிரதமர் அலுவலகம் அருகே பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


வங்கதேச பிரதமர் அலுவலகம் அருகே பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2018 10:45 PM GMT (Updated: 12 Jan 2018 9:21 PM GMT)

வங்கதேச பிரதமர் அலுவலகம் அருகே பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளை அதிகாலை நேரத்தில் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

டாக்கா,

வங்கதேசத்தில் சமீப காலமாக மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு வெளிநாட்டினர், சமூக வலைத்தள கட்டுரையாளர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்றவர்களை குறிவைத்து கொல்கின்றனர்.

2016-ம் ஆண்டு, டாக்காவில் ஓட்டல் ஒன்றை 5 பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு நடத்திய மிருகவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 20 பேர் கொன்று குவிக்கப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அங்கு பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் அந்த நாட்டு அரசு கவனம் செலுத்தத் தொடங்கியது.

இந்த நிலையில் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா அலுவலகம் அருகே தேஜ்கான் பகுதியில் ரூபி வில்லா என்ற 6 மாடி கட்டிடத்தின், 4-வது தளத்தில் பயங்கரவாதிகள் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்தவர்களை வெளியே பார்ப்பது அரிது எனவும், வீட்டின் கதவையோ, ஜன்னல்களையோ கூட திறந்து வைப்பது இல்லை எனவும் தெரிய வந்தது.

இது பற்றி ஆர்.ஏ.பி. என்று அழைக்கப்படுகிற அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த கட்டிடத்தின் பொறுப்பாளரிடம் விசாரித்தபோதும் அவர்களைப் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று அதிகாலை நேரத்தில் அந்தப் பகுதியை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். அந்த 6 மாடி கட்டிடத்தின் பிற வீடுகளில் குடியிருந்து வந்தவர்களை அதிரடிப்படையினர் பத்திரமாக வெளியேற்றினர். அதற்குள் அங்கு அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு இருப்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொண்டனர். அவர்கள் உடனடியாக அதிரடிப்படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

அதிரடிப்படையினரும் தங்கள் துப்பாக்கியால் பதிலடி கொடுத்தனர்.

நீண்ட நேரம் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து தாக்குதல் நின்றது.

அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் சென்று பார்த்தபோது, 3 பயங்கரவாதிகளும் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியாகிக் கிடந்தது தெரியவந்தது.

இருப்பினும் இந்த சண்டையின்போது, பயங்கரவாதிகள் அவர்கள் தங்கி இருந்த வீடு முழுவதும் எரிவாயுவை நிரப்பி இருந்ததும், ஸ்டவ் அடுப்பில் கையெறி குண்டை பொருத்தி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அந்த வீட்டை தகர்க்க முயற்சித்து, அந்த முயற்சி தோல்வியில் முடிந்து இருக்கும் என்று தெரிய வந்து உள்ளது.

இது பற்றி அதிரடிப்படையின் தலைவர் பெனாசிர் அகமது நிருபர்களிடம் பேசும்போது, “இறைவனின் கருணையால்தான் அவர்கள் அந்த கட்டிடத்தை தகர்க்க நினைத்த முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 20 முதல் 30 வயதுவரை உடையவர்கள். கடந்த 4-ந் தேதிதான் அந்த வீட்டுக்கு சாதாரண குடிமக்கள் போன்று வாடகைக்கு குடிவந்து உள்ளனர். வீட்டின் உரிமையாளர் ரூபெல்லுக்கு கூட அவர்களைப் பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவில்லை” என்றார்.

3 பயங்கரவாதிகளின் உடல் களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Next Story