டோக்லாமில் எங்களுடைய பாதுகாப்பு கட்டமைப்பு சட்டப்படியானது; இந்தியா கருத்து கூறக்கூடாது - சீனா சொல்கிறது


டோக்லாமில் எங்களுடைய பாதுகாப்பு கட்டமைப்பு சட்டப்படியானது; இந்தியா கருத்து கூறக்கூடாது - சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2018 10:47 AM GMT (Updated: 19 Jan 2018 10:47 AM GMT)

டோக்லாம் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாதுகாப்பு கட்டமைப்புகள் சட்டப்படியானது என சீனா கூறிஉள்ளது. #Doklam #India #China


பெய்ஜிங், 


சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. ஜூன் 16-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 28-ம் தேதி வரையில் டோக்லாமில் இருதரப்பு இடையேயும் மோதல் போக்கு நீடித்தது. 

இதனையடுத்து இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி டோக்லாம் விவகாரத்தில் வெற்றி கிடைத்ததாக கூறினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இருதரப்பு ராணுவமும் அங்கிருந்து வெளியேறிவிட்டது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
ஆனால் டோக்லாம் என்றைக்குமே எங்களுக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது. மோதல் போக்கு முடிந்த நிலையிலும் டோக்லாமில் நடப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை அதிகரிக்க செய்து வருகிறது. 


இப்போதும் என்டிடிவி வெளியிட்டு உள்ள சிறப்பு செய்தியிலும் செயற்கைக்கோள் புகைப்பட தொகுப்பு வெளியாகி உள்ளது. டோக்லாம் பகுதி 2005-ம் ஆண்டு இருந்தது எப்படி என்பது முதல் இப்போது அங்கு உள்ள நிலை குறித்தான செயற்கைக்கோள் புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் ராணுவ முகாம் அருகேயே சீனா ராணுவ தளம் ஒன்றை முழுவதுமாக இப்போது கட்டிமுடித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது. 

சீனா அங்கு ஹெலிகாப்டர்களை இறக்குவது, ராணுவ தளவாடங்களை நிறுத்துவது உள்பட பல்வேறு நிலைகளுடன் பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைக்கு மிக அருகாமையில் முன்னெடுத்து உள்ளது என செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது.

இச்செய்தியை குறிப்பிட்டு சீனா டோக்லாமை ஆக்கிரமித்துவிட்டது, மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது. சீனாவின் கட்டமைப்பு பணிகள் அனைத்தும் டோக்லாமில் மீண்டும் ஒரு மோதல் போக்கிற்கு வழிவகை செய்யும் வகையில் அமைத்து உள்ளதாக கருதப்படுகிறது. 

இந்தியாவில் இவ்விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில் சீனா, டோக்லாமில் முன்னெடுக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு கட்டமைப்பு பணிகள் அனைத்தும் சட்டப்பூர்வமானதுதான், இந்தியா இதுதொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என கூறிஉள்ளது. 

டோக்லாமில் சீன கட்டுமானம் தொடர்பாக வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லூ காங்கிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு லூ காங் பதில் உரைத்து பேசுகையில், “இது தொடர்பான செய்தியை நானும் பார்த்தேன். இதுபோன்ற புகைப்படங்களை யார் வழங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இதுதொடர்பான முழு தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.  டோக்லாம் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. டோக்லாம் எப்போதும் சீனாவிற்கு சொந்தமானதுதான். டோக்லாம் சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாகும். இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு பிரச்சனையும் கிடையாது.
சீனா இப்பகுதியில் பாதுகாப்பு கட்டமைப்பை அப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் மக்களுக்காக முன்னெடுத்து உள்ளது.

எல்லையில் உள்ள மக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் விதமாக கட்டமைப்பு பணிகள், சாலை பணிகளை சீனா முன்னெடுத்து உள்ளது. சீனா தன்னுடைய சொந்த பகுதியில் அதனுடைய இறையாண்மையை மேற்கொண்டு வருகிறது. இது சட்டப்பூர்வமானது மற்றும் நியாயமானது. இந்தியப்பகுதியில் இந்தியா கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது அதுதொடர்பாக சீனா கருத்துக்களை தெரிவிக்காது, அதுபோன்று சீனா அதனுடைய பகுதியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது இந்தியாவும் எந்தஒரு கருத்தையும் தெரிவிக்காது என நம்புகிறோம்,” என பேசிஉள்ளார். 

டோக்லாம் பகுதியில் சீனா இரண்டாவது மோதல் போக்கிற்கு தயாராகி வருகிறது என்ற கவலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிஉள்ள லூ காங், இந்தியாவின் “கோழியின் கழுத்து" பகுதியின் அருகில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதை இந்தியா தடுத்து நிறுத்தியது, அது இருதரப்பு உருவை கடுமையான சோதனைக்கு தள்ளியது,” என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story