ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜாதவ் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பி அடாவடி


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜாதவ் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பி அடாவடி
x
தினத்தந்தி 20 Jan 2018 11:30 PM GMT (Updated: 21 Jan 2018 12:10 AM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் குல்பூ‌ஷண் ஜாதவ் பிரச்சினையை எழுப்பியது.

நியூயார்க், 

நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் நீடிப்பது பற்றி அமெரிக்கா பிரச்சினை எழுப்பியது.

இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் பேசியபோது, ‘‘பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாகிஸ்தானுடன் இணைந்து வலுவாக செயல்படத்தான் அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அந்த நாடு பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக நீடிப்பதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது’’ என்று கூறப்பட்டது.

தொடர்ந்து இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் பேசும்போது, ‘‘நல்ல மற்றும் கெட்ட பயங்கரவாதிகள் இடையே வித்தியாசம் காண்பதில் தன் மனோபாவத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்’’  என்று கூறினார்.  மேலும், ‘‘எல்லை தாண்டி வருகிற பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் அடாவடியாக, பாகிஸ்தானால் இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள குல்பூ‌ஷண் ஜாதவ் பிரச்சினையை எழுப்பினார். 

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசியவர்கள், தங்கள் சொந்த வரலாற்றை பார்க்க வேண்டும். எங்கள் நாட்டுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டிருப்பதை, இந்திய உளவாளியை (ஜாதவ்)  நாங்கள் பிடித்திருப்பது சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

Next Story