ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 18 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 18 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 10:00 PM GMT (Updated: 21 Jan 2018 8:22 PM GMT)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். #Afghanistan

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 18 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகத்தின் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்கள் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்துவந்த ஆப்கானிஸ்தான் தலீபான் அரசை அமெரிக்கா அகற்றியது. ஆனாலும் அங்கு தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியவில்லை. அவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் கடுமையான பாதுகாப்பு வளையங்களைக் கொண்ட 6 மாடி இன்டர்கான்டினன்டல் சொகுசு ஓட்டலில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளுடன் புகுந்தனர்.

கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கே வந்து தங்கி இருந்த விருந்தினர்களையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

உடனடியாக ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பயங்கரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டனர்.

இந்த சண்டை நேற்று காலை வரை தொடர்ந்து 13 மணி நேரம் நீடித்தது. அங்கு பலத்த துப்பாக்கிச்சூடு சத்தங்களும், குண்டுவெடிப்பு சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன.

இந்த சண்டையின்போது பயங்கரவாதிகள் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 14 பேர் வெளிநாட்டினர் ஆவர். இதை ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நஜீப் டேனிஷ் உறுதி செய்தார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்துதான் தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன.

இந்த தாக்குதலின்போது அங்கு தங்கி இருந்த சுமார் 160 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். அவர்களில் பலர் பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்து உள்ளது. சிலர் காயங்களும் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

2011-ம் ஆண்டு இந்த ஓட்டலில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளதால், இந்த தாக்குதலும் அவர்களது கைவரிசையாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமானதும், கோட்டை போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதுமான இந்த ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் புகுந்தது எப்படி என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

ஆனால், இந்த தாக்குதலில் தப்பிய அந்த ஓட்டலின் நிர்வாகி அகமது ஹாரிஸ் நயாப், ஓட்டலின் சமையலறை வழியாகத்தான் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.

தாக்குதல் நடந்த ஓட்டலில் தகவல் தொழில் நுட்ப மாநாடு ஒன்று நடக்க இருந்தது. அதற்காக அங்கு அந்த நாட்டின் தொலைதொடர்புத்துறை பிராந்திய இயக்குனர் அஜிஸ் தாயிப் வந்தபோதுதான் தாக்குதல் நடந்து உள்ளது.

இதுபற்றி அவர் கூறும்போது, “தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் வந்தபோது நான் பார்த்தேன். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாக்குதலை தொடங்கி விட்டனர். நான் ஒரு தூணின் பின்புறமாக ஒளிந்து கொண்டேன். பலரும் தங்கள் அறைகளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டனர். ஒரு சில வினாடிகளுக்கு முன் இரவு உணவை மகிழ்ச்சியாக சாப்பிட்டவர்கள், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும் அலறியடித்துக்கொண்டு பைத்தியக்காரர்கள் போல ஓலமிட்டவாறு ஓட்டம் எடுத்தனர்” என்றார்.

காபூல் நகரில் உள்ள ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என அங்கு உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story