ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் பாகிஸ்தான் சொல்கிறது


ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 22 Jan 2018 12:02 PM GMT (Updated: 22 Jan 2018 12:02 PM GMT)

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது. #HafizSaeed #Pakistan

இஸ்லாமாபாத்,

மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. அவனது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்து உள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அரசு அமைந்த பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த ஹபீஸ் சயீத் கடந்த நவம்பர் மாத கடைசியில் விடுதலை செய்யப்பட்டான். அவனை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் நிறுவனரான ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளான். இந்த கட்சி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அவன் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஹபீஸ் சயீத் அரசியல் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அமெரிக்கா, அவரது அரசியல் பிரவேசத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது.

பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இதனையடுத்து 72 தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்க கூடாது என பாகிஸ்தான் அரசு பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டது. இதில் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத இயக்கங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் “ஹபீஸ் சயீத் சாகிப் மீது நாட்டில் எந்த ஒரு வழக்கும் கிடையாது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது,” என அந்நாட்டு பிரதமர் அப்பாஸி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஹபீஸ் சயீத் மீது சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கண்டித்து உள்ளது.

பயங்கரவாதம் விவகாரத்தில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடன் தொடர்புடைய பிற இயக்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்துவரும் நிலையில் ஐ.நா.வின் பொருளாதார தடை குழுவின் கண்காணிப்பு பிரிவு பாகிஸ்தான் செல்கிறது. ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு ஏற்கனவே ஐ.நா.வின் தடை பட்டியலில் உள்ளது. இதற்கிடையே ஐ.நா. குழுவின் பாகிஸ்தான் வருகையானது வழக்கமான ஒன்றுதான் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் ஐ.நா. பொருளாதார தடையை நடைமுறைபடுத்தல் ஆகிவை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை ஆய்வு செய்வதற்கு ஐ.நா. குழுவானது வருகிறது என பாகிஸ்தான் தூதரக தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் ஜமாத் உத் தவா மற்றும் ஹபீஸ் சயீத்தை அணுக அனுமதி கேட்கமாட்டார்கள், அப்படி அனுமதி கோரினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், ஐ.நா. குழு வருகையானது திட்டமிட்டதுதான் என பாகிஸ்தான் தூதரக தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

Next Story