மாலத்தீவில் அரசியல் நெருக்கடி தீவிரம் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவு


மாலத்தீவில் அரசியல் நெருக்கடி தீவிரம் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2018 3:31 PM GMT (Updated: 5 Feb 2018 3:31 PM GMT)

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.


துபாய்,

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. 

  மேலும், அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மாலத்தீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் உத்தரவிட்டு உள்ளது. அவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டால் அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தப்போவதில்லை என்று அதிபர் அப்துல்லா யாமீன் முடிவு செய்து உள்ளார் என கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளது.

மாலத்தீவு பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே மந்திரி ஹூசைன் ரஷீத் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அவர் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில், ‘‘நாட்டின் உயரிய அமைப்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து நடக்கப்போவதில்லை என்ற அரசின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. இது எனது மனசாட்சியை உறுத்துகிறது. அதனால் பதவியில் இருந்து விலகுகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

 இதற்கிடையே உத்தரவை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் கடிதம் எழுதினார் என செய்திகள் வெளியாகியது. 

 மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தொடர்ந்து பதவி வகிக்கும் நிலையில் நீதிபதிகள் தொடர்ந்து பயத்தில் உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் அப்துல்லா யாமீன்  உத்தரவிட்டு உள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.


Next Story