அரிசி கிலோ ரூ.448! பால் லிட்டர் ரூ.263..! இலங்கையில் அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்


Image courtesy: AFP
x
Image courtesy: AFP
தினத்தந்தி 17 March 2022 5:04 AM GMT (Updated: 17 March 2022 5:04 AM GMT)

ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் வெடித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள், ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு, 

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30-ந்தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார்.

இந்த வருடத்தில் இதுவரை இந்தியா 1.40 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.நிதி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் இலங்கை ரூபாவின் பெறுமதியை 36 வீதத்தால் குறைத்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.

போர் காலத்தில் கூட காணப்படாத  நிலை அங்கு உள்ளது. அரிசியின் விலை  கிலோ ஒன்றுக்கு 448 இலங்கை ரூபாயாக உள்ளது   (128 இந்திய ரூபாய்) . ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 (ரூ. 75 இந்திய ரூபாய்) உள்ளது.

அத்தியாவசிய பொருட்களும் மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்தை தொட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரே முட்டையின் விலை ரூ.28 என அதிர்ச்சி அளிக்கிறது. ஆப்பிள் ஒன்றின் விலை ரூ.150 என ‘கசக்கிறது’.பேரீச்சம்பழம் கிலோ ரூ.900-ஐ தொட்டிருக்கிறது. பால், கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு என்று சகலத்தின் விலையும்  இறக்கை கட்டிப் பறக்கின்றன.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய ‘சாதனை’ படைத்திருக்கின்றன. இதன் காரணமாக பல வாகனங்கள் வீதியோரமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டன. பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக பஸ் அதிபர்கள்  சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன.

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த காரணத்தால், இன்று முதல் சிற்றுண்டி விடுதிகளை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துவிட்டது.

தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ள நிலையில் அனைத்து பொருட்கள், சேவைகளுக்கான விலைகள் 29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பன்னாட்டு நாணய நிதியம் என்று பல தரப்பிலும் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்க முயல்கிறது இலங்கை. 

இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து  அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் வெடித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள், ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி தெருக்களில் திரண்டனர். எதிர்கட்சியான ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story